சூயஸ் நிறுவனத்திற்கு 3 இலட்ச ரூபாய் அபராதம்: மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை..!
சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் அடுத்தடுத்து அபராதம் விதித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன், ரூ.3,167 கோடிக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. முதற்கட்டமாக கோவை மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோயமுத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்-69 ல் உள்ள பாரதி பார்க்கில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமான பணிகளை கோவை மாநராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், கடந்த 2023 செப்டம்பரில் தான் பணிகளை துவக்கியது தெரியவந்தது. மேலும் கட்டுமான பணியில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் நோட்டீஸ் வழங்கினார். மேலும் மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவர் உத்தரவிட்டார். பணிகளில் காலதாமதம் செய்து வரும் சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் அடுத்தடுத்து அபராதம் விதித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 19 ம் தேதி மத்திய மண்டலம் வார்டு எண் 31 ல் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் சூயஸ் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை மந்தமாக மேற்கொண்டு வந்தது, சாலைகளை மறு சீரமைப்பு செய்யாதது உள்ளிட்ட மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்திய எதையும் அந்த நிறுவனம் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது.
பின்னர் சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நோட்டீஸ் வழங்கினார். மேலும் பத்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் அவர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.