கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கள் குடித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், கள் இறக்க அனுமதிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-07-08 12:30 GMT

கள்ளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட கள்ளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், கள் இறக்க அனுமதிக்க கோரியும் முழக்கங்களை எழுப்பியபடி, ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திடீரென கைகளில் வைத்திருந்த கள்ளை குடித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

இது குறித்த அவர்கள் கூறுகையில். தமிழகத்தில் கள் இறக்க உடனடியாக தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். கள் என்பது உணவு பண்டம். உடலுக்கு எந்த விதமான தொந்தரவும் கிடையாது. ஆனால் இவர்கள் சாராயத்தை விற்கலாம். கள்ளிற்கு அனுமதி கிடையாதா? உடனடியாக தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

அண்டை மாநிலமான கேரளாவில் கள்ளிற்கு அனுமதி உள்ளது. ஆனால் தமிழகத்தில் இல்லை. கள் இறக்க அனுமதி கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக கள் இறக்கி கேரளாவிற்கு விற்பனை செய்ய உள்ளோம். அதற்கு அனைத்து பணிகளையும் தொடங்கி விட்டோம்.

இதற்கு எந்தவித தடையும் கிடையாது. இது உணவு பட்டியலில் வருகிறது. அதனால் இதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. நாங்கள் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கள் இறக்குவோம். அவர்கள் எங்களை வேண்டுமென்றே கைது செய்தாலும் எங்களுடைய போராட்டத்தை கைவிட மாட்டோம் எனத் தெரிவித்தனர். 

Tags:    

Similar News