மதுரை அதிமுக மாநாட்டுக்கு பயந்து உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது திமுக

இந்தியா முழுவதும் வியக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறும். மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.

Update: 2023-08-17 12:30 GMT

கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு பயந்து உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. அறிவித்து இருக்கிறது என்று கோவையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

மதுரையில் வருகிற 20-ந் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வியக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறும். மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.

இந்த மாநாட்டை கண்டு பயந்து நடுங்கிப்போய், என்ன செய்வது என்று தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் அங்கு உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார். இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இப்போது 2 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. 3-வது ஆண்டு நடக்கிறது. இவ்வளவு நாட்கள் என்ன முயற்சி எடுத்தார்கள்? ஆனால் அதிமுக. நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் எடுத்தது. அதே முயற்சியை தான் தி.மு.க.வும் எடுத்து வருகிறது. இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்தாவது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய, ஆதரவை கேட்டு அந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. 10 ஆண்டுகள் ஆனாலும் இவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அ.தி.மு.க., மருத்துவ படிப்பு சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் தான் இந்த ஆண்டு 606 பேர் தேர்வாகி இருக்கின்றனர்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதற்காக பெங்களூரு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை பற்றியும், விவசாயத்தை பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார். நானும் டெல்டாகாரன் என்று சொன்னார். ஆனால் காவிரியில் தண்ணீர் வராததால் டெல்டாவில் நெற்பயிர்கள் காய்ந்து போனது. மாநிலத்தில் பிரச்சினை என்று வந்தபோது எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் தான் கூட்டணியில் அங்கம் வகிப்பேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னார்.

அதேபோல காவிரி தீர்ப்புப்படி, தண்ணீரை முழுமையாக திறந்து விட்டால் தான் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று மு.க. ஸ்டாலின் சொல்லவில்லை. மதுரை மாநாட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருக்கிறார்கள். அதெல்லலாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம். தி.மு.க.வின் 27 மாத கால ஆட்சியில் ரூ.2 லட்சத்து 73 ஆயிரம் கோடி கடன் வாங்கியதுதான் மிச்சம். கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விமான நிலையத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், சூலூர் கந்தசாமி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், அமுல்கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, அண்ணா தோட்ட தொழிற்சங்க மாநில தலைவர் வால்பாறை அமீது, முன்னாள் எம்.பி மு.தியாகராஜன், சிங்கை பாலன், தோப்பு அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News