திமுக, அதிமுகவினர் பொங்கல் கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை உற்சாகமாகவும், வெகுவிமர்சையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.;
பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை உற்சாகமாகவும், வெகுவிமர்சையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை மருதமலை அடிவாரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு வள்ளியம்மன் திருக்கோவிலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஏழாம் ஆண்டு பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் செந்தில் பிரபு கலந்து கொண்டு பெண்களுக்கு பொங்கல் பானைகளை வழங்கி பொங்கலை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். மேலும் இந்த விழாவில் கழக மகளிர் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல கோவை பீளமேடு பகுதியில் திமுக சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது 75 பானைகளில் பொங்கல் வைத்து, பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, திமுக கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றினார். பின்னர் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து கோவை வேலாண்டிபாளையம், டாக்டர்.ராதாகிருஷ்ணன் வீதியில், கோவை மாநகர் மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் 4001 பொதுமக்களுக்கு கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் மற்றும் 10,+1,+2 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்துக் கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.