2 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் கைது
கிராஜுவிட்டி தொகையை பெறுவதற்காக அனுமதி அளிக்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது;
கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர் சிறில் ஆரோக்கியம் அலெக்சாண்டர். இவர் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். தனது கிராஜுவிட்டி தொகையை பெறுவதற்காக மாவட்ட கருவூலத்தில் விண்ணப்பித்து இருந்த பொழுது, அதற்கு அனுமதி அளிக்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆசிரியர் சிறில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் அறிவுறுத்தலின் படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்த போது, நேரடியாக பணத்தை வாங்காத கருவூல அதிகாரி ராஜா தனது மேஜை டயரில் போடும்படி தெரிவித்துள்ளார். மேஜை டிரைவரில் பணத்தை போட்ட ஆசிரியர் சிறில் ஆரோக்கியம் அலெக்சாண்டர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சிக்னல் கொடுத்தார்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கருவூல அதிகாரி ராஜாவின் டேபிளை ஆய்வு செய்தனர். அப்பொழுது அதில் பணம் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து ராஜாவை கைது செய்தனர். மேலும் லஞ்ச பணம் வசூல் செய்தது தொடர்பாக அவரிடம் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கருவூல அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டிருப்பது சக அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.