கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-17 10:00 GMT

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.

நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவில் தமிழ்நாடு முழுக்கவும் முதல் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்ட நிலையில், தேர்தல் பணியானது கோவை மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது

கோவை மாநகரில் கட்சிகளின் சார்பில், மேம்பாலங்களில் பக்க வாட்டு சுவற்றில் வரையப்பட்டு இருந்த கட்சியின் சின்னங்கள் மற்றும் வாசகங்களை, அரசுப் பணியாளர்கள் வர்ணம் பூசி அழித்தனர். இதே போல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த தமிழக அரசின் சாதனைகள், திட்ட விழாக்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. குறிப்பாக பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக சிசிடிவிகளின் கூடிய தேர்தல் வாகனங்களில், தேர்தல் அதிகாரிகள், காவல்துறையுடன் இணைந்து வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல பதட்டமான வாக்கு சாவடியின் இடங்கள், அரசியல் கட்சியின் பிரச்சார வாகனங்கள் உள்ளிட்டவை கண்காணிக்க உள்ளனர். இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் செல்லக்கூடிய வாகனங்களை இணையத்தின் வாயிலாக அறிவதற்கும், மக்கள் புகார் கூறுவதற்கும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி ஆய்வு செய்து மக்களின் புகார் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் தேர்தல் சம்பந்தமான செய்திகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தொலைக்காட்சிகள் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News