ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்க கோரிக்கை

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று தமிழகத்தில் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-01-08 09:56 GMT

ராமர் சிலையுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட இடத்தில் சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. ராமர் கோவில் வளாகம் 2.7 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ளது.  கோவில் மட்டும் மூன்று தளங்களுடன் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது.

இந்தியாவில் வாழும் இந்துக்கள் மட்டும் இன்றி உலகம் முழுவதும் வாழும் இந்துக்களும் ராமர் கோவில் திறப்பினை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் வருகின்ற 22ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 51 இன்ச் உயர குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி எடுத்து கொடுக்க உள்ளார். ராமர் கோவில் திறப்பு விழாவினை வடமாநில மக்கள் தீபாவளி திருநாள் போல் கொண்டாட உள்ளனர்.

ராமர் கோவில் திறப்பு விழாவினை  முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்ப அவ்வமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது ராமர் சிலை, மற்றும் பதாகைகளை எடுத்து வந்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

இது குறித்து அவ்வமைப்பின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கூறுகையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காண்பதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து இந்து மக்களும் தயாராகி வருவதாகவும், பல்வேறு மக்களும் நேரில் செல்வதற்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். அன்றைய தினம் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்த தயாராகி வருவதாகவும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரலையை காண்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருவதால் தமிழக அரசு அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் மெக்கா, ஜெருசலேம் போன்ற தளங்களுக்கு செல்வதற்கு சலுகைகள் அளிக்கப்படுவது போல் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதற்கும் மாநில அரசு சார்பில் சலுகைகள் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News