கோவையில் பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி:வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு
கோவை மாநகர், தாலுகா காவல்நிலையங்களில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.;
கோவையில் பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற அணிக்கு மாநகர காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்து கோப்பையை வழங்கினார்.
பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, கோவை மாநகர், தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் பெண் காவல் ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான (Yellow Warriors) அணியும், பெண் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான (Blue Fighters) அணியும் மோதின.
முதல் போட்டியில் டாஸ் வென்ற பிரபா தேவி அணி பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணியிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய தெய்வமணி அணி 3.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்து. 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தெய்வமணி அணியை சார்ந்த தேவி 10 பந்துகளில் 3 சிக்ஸர் 3 போர்கள் உட்பட 33 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.
இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தெய்வமணி அணி பவுளிங்கை தேர்வு செய்தது. பிரபா தேவி அணி நிர்ணியிக்கப்பட்ட 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்தது. இதில் பொன்னுபேபி 29 பந்துகளில் 10 சிக்ஸர் 2 ஃபோர்கள் உட்பட 72 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார். பின்னர் ஆடிய தெய்வமணி அணி 6.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தேவி 22 பந்துகளில் 8 சிக்ஸர் 4 ஃபோர்கள் உட்பட 70 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.
இப்போட்டியில் இரண்டிற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பெண் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான Blue Fighters அணி அபார வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பாராட்டி வெற்றி கோப்பையை வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண் காவலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.