தேர்தல் பத்திரங்களுக்கு தடை ; சிபிஎம் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
Coimbatore News- தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்தும், பட்டாசு வெடித்தும் சிபிஎம் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Coimbatore News, Coimbatore News Today- தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என்ற சட்ட திருத்தத்தால் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகள் பெற்றது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை கிடைக்கப் பெற்றது கடும் சர்ச்சைகளை உண்டாக்கியது.
இதனை அடுத்து, தேர்தல் பத்திரங்கள் மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி 2019ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் அக்கட்சியினர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறும் போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் லஞ்சம், முறைகேடான நிதி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்று வரும் அரசியல் கட்சிகள் குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற மறுத்த ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான். தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான கோடியை பாஜக திரும்பக் கொடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் 5 அமர்வு கொண்ட நீதிபதிகள் சரியான முறையில் தீர்ப்பு வழங்கியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. நீதிமன்றம் அறிவித்த தேதிக்குள் நன்கொடை பெற்ற அனைத்து கட்சிகளும் நிதியை திரும்பி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.