சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2024-05-13 09:13 GMT

போலீஸ் காவலுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்.

பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நீதிமன்றததில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சவுக்கு சங்கிற்கான சிகிச்சையை வழங்க உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டதில் வலது கையில் இரண்டு இடங்களில் லேசான எலும்பு முறிவு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்காக மாவு கட்டு போட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போடப்பட்டது. பின்னர் காவல் துறையினர் சவுக்கு சங்கரை பாதுகாப்பாக மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது கோவை நான்காவது நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவண பாபு அனுமதி வழங்கினார். விசாரணைக்கு பின்னர் நாளை மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News