மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க பா.ம.க .புகார் மனு
மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. சார்பில் கோவை மாநகர காவல் ஆனையரிடம் மனு அளிக்கப்பட்டது.;
விளம்பரம் பார்த்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு வரும் மைவி3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஒருங்கினைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கபட்டது.
அம்மனுவில் மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதுடன் காவல்துறையினரையும் மிரட்டும் உரிமையாளர் என கூறிக்கொள்ளும் சக்தி ஆனந்த் மட்டுமல்லாது அந்நிறுவனத்தின் பின்புலமாக செயல்படும் குருஜி என்கிற விஜயராகவன் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் மேலும் இந்நிறுவனத்தால் ஏமாற்றபட்ட மக்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் கிடைக்க வேண்டியும் அந்நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட பா.ம.க. செயலாளர் கோவை ராஜ், கடந்த 5 மாத காலமாக மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வரும் மைவி3 நிருவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் பேசி தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்நிறுவனத்தின் மீது புகாரளித்த கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி மீது சமுக வலைதளங்களில் தனி நபர் தாக்குதல் நடத்தபடுவதாகவும் உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுகொண்டார். மேலும் கோவை மாவட்ட பாமக மணல் கொள்ளை, செங்கல் சூளை மணல் கொள்ளை, கனிம வள கொள்ளை மற்றும் நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாது பல மோசடிகளை கையில் எடுத்து வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவித்தவர் மைவி3 நிறுவன விவகாரத்தில் மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதியின் பின்னால் கண்டிப்பாக பா.ம.க. நிற்கும் எனவும் தெரிவித்தார்.