கோவை மாநகராட்சியில் குறிஞ்சி வனம் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்த ஆட்சியர்
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பிள்ளையாா்புரத்தில் குறிஞ்சி வனம் திட்டம் தொடங்கப்பட்டது;
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பிள்ளையாா்புரத்தில் குறிஞ்சி வனம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
கோவை மாவட்ட வனத் துறை சாா்பில் குறிஞ்சி வனம் என்ற திட்டத்தின் கீழ் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வு, கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பிள்ளையாா்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வைத் தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநா் மற்றும் வனப் பாதுகாவலா் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வெள்ளிக்கிழமை 300க்கும் மேற்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டன. 2 ஏக்கா் பரப்பளவு கொண்ட நிலத்தில் இளைப்புரசு,வாகை, அத்தி, மூங்கில், தேக்கு உள்ளிட்ட 200 வகையான 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், சலீம் அலி பறவைகள் சரணாலய முதுநிலை அறிவியலாளா் பிரமோத், மதுக்கரை வனச் சரகா் சந்தியா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இயற்கை ஆா்வலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
குறிஞ்சி நிலம்... தமிழ் நிலத்தை வரையறை செய்துள்ள கருத்தைத் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் வடவேங்கடம் தென்குமரி ஆஇடைத் தமிழ் கூறும் நல் உலகத்து வழி அறியலாகிறது. ஓர் இனத்தின் வாழ்க்கை முறையும் நம்பிக்கை களும், குண நலன்களும், பண்பாட்டுக் கூறுகளும், அந்த இனம் சார்ந்திருக்கும் நிலத்தன்மை, தட்பவெட்பநிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும் என குரோஸ் ஹோட்ஜ் எனும் நிலவியல் அறிஞர் கூறுகிறார்.
தமிழர்களுக்கு இக்கருத்து பொருத்தமாக அமைந்துள்ளது. திணைமவியல் சூழலில் பயிர்விக்கப்பட்ட உணவுப் பயிர்கள், உழவுமுறைகள், பயிர்அறுவடை, பயிர்க்காவல் முறை ஆகியன குறித்த பதிவுகள் திணைக் கவிதைகளில் காணக் கிடைக்கின்றன. திணைக் கட்டமைப்பில் முதன்மையாக அமைந்த குறிஞ்சி நிலமே வேளாண்மையின் தோற்றுவாயாக இருந்திருக்க முடியும். நாகரிக வளர்ச்சியின் விளைவாக நீர் மேலாண்மை உருவாக்கத்தில் மருதம் உதயமாயிருக்க வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு நிலவியல் சூழலும் மாந்தரின் தேவைக்கிணங்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில், குறிஞ்சி நிலமானது இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கில், அரபிக்கடலைச் சார்ந்து அமைந்திருக்கும் பகுதி. இம்மலைப் பகுதியே இன்று மேற்கு மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது. இம்மலை மராட்டிய மாநிலத்தில் தபதி ஆற்றங்கரையில் தொடங்கி, குஜராத், கோவா, கர்நாடாக, கேரளா இறுதியாகத் தமிழகத்தின் கன்னியாகுமரியில் முடிவடைகிறது. சுமார் 1600 கி.மீ நீளமும் 900 -2400 வரையிலான உயரமும் கொண்ட இம்மலை, இமயமலைக்கும் மூத்த மலையாக விளங்குகிறது. இப்பெருமலையைத் தமிழர்கள் மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலமாக வரையறை செய்திருக்கிறார்கள். கிழக்குத் தொடர்ச்சி மலை கிழக்குக் கடற்கரையை ஒட்டியமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைபோல் ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ளது.