கோவை மக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கிடைக்கும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Coimbatore News- கோவை மாநகர் முழுவதும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும். கோவை மக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கிடைக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்ற விழாவில், மாநகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 780 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள், பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த அன்னூர், சூலூர், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களில் 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், “கோவை மாநகரில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 780 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 3 வது திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதில் மகிழ்ச்சி. மாதம் ஒரு முறை கோவைக்கு வந்து கொண்டு இருக்கின்றேன். இது கலைஞர் வாழ்ந்த ஊர். ஈரோட்டில் 318 கோடி மதிப்பீட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு திட்டங்களை துவங்கி வைத்தேன். மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை தான் நான் அதிகம் பயன்படுத்துகிறேன். முதல்வரும் அவற்றையே பயன்படுத்துகின்றார். பரிசு பொருட்கள் கூட மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என சொல்லி இருக்கின்றேன். பெரியாரும், அண்ணாவும் சந்தித்து கொண்ட திருப்பூருக்கு போய் விட்டு, கலைஞர் வாழ்ந்த கோவைக்கு வந்து இருக்கின்றேன்.
கோவை மாநகர் முழுவதும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தோம். இனி 2 நாட்களுக்கு ஒரு முறை கோவை மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும். கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கொண்டு செல்வதே இலக்காக செயல்படுகின்றோம். தமிழகம் முழுவதும் தண்ணீர் கிடைக்க விதையை போட்டவர் கலைஞர். தமிழகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. நகரங்களை நோக்கி வருபவர்கள் அதகமாகி வருகின்றனர். நகரங்கள் வேகமாக வளரும் போது அதற்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 2035ல் எவ்வளவு மக்கள் தொகை, 2050 ல் எவ்வளவு மக்கள் தொகை எனல் கணக்கில் கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும்.
கோவையில் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும். கோவை மக்களின் தாகத்தை போக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சீரான வளர்ச்சி அடைந்து இருக்கின்றது. அனைத்து நகரங்களும் வளர்ச்சியை பெற்று இருக்கின்றன. இதை பிற மாநிலங்களுடன் ஓப்பிட்டால் வித்தியாசம் தெரியும். இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார். தமிழ்நாட்டில் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் இந்தியாவை வழிநடத்துகின்றது.
கடந்த 5 வருடத்தில் 6 லட்சம் கோடி வரியாக ஒன்றிய அரசுக்கு கொடுத்து இருக்கின்றோம். ஆனால் அவர்கள் 1.58 லட்சம் கோடி மட்டுமே நமக்கு வழங்கியுள்ளார்கள். ஒரு ரூபாய் கொடுத்தால் 29 காசு மட்டுமே திருப்பி கொடுக்கபடுகின்றது. இதை உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்த இரு மாதம் மிக முக்கியமான காலம். இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை. சென்ற முறை சிறு சிறு தவறுகள் நடந்து இருந்தாலும், அதை சரி செய்ய வேண்டும். மகளிர் குழுவினர் முதல்வரின் முகமாக இருந்து மக்களிடம் திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.