கூரியரில் போதைப் பொருள் வந்ததாக சித்த வைத்தியரிடம் மோசடி: ரூ.40 லட்சம் மீட்பு

வழக்கு பதிவு செய்த 15 நாட்களுக்குள் பணம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.;

Update: 2024-06-28 11:30 GMT

மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம்

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். சித்த வைத்தியரான இவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரியாக உள்ளதாகவும், மும்பைக்கு அவர் பெயரில் வந்த கூரியரில் போதைப் பொருள் இருப்பதாக தெரிவித்தார். மேலும் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து செய்ய உள்ளோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதனால் அச்சமடைந்த சந்திரசேகர் தான் போதை பொருள் கடத்த வேண்டிய அவசியமில்லை என்றும், கூரியரில் மும்பைக்கு எவ்வித பார்சல் அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து போனில் பேசிய மர்ம நபர் சந்திரசேகரிடம் வங்கி கணக்கு விபரங்களை கேட்டுள்ளார். உடனே அவர் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் அந்த நபர் சந்திரசேகரிடம் உங்களது வங்கிக் கணக்கில் உள்ள தொகையை தான் கூறிய வங்கி கணக்குக்கு உடனே அனுப்ப வேண்டும் என்றும், அந்த பணத்தை சரிபார்த்த பின்னர் உடனடியாக திருப்பி அனுப்புவதாக தெரிவித்தார்.

இதனை நம்பிய சந்திரசேகர், உடனடியாக அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூபாய் 40 லட்சத்தை அனுப்பினார். ஆனால் அந்த நபர் கூறியபடி பணத்தைத் திரும்பி அனுப்பவில்லை. இதனால் தனது பணம் ரூபாய் 40 லட்சம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்த போலீசார் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட மர்ம நபரின் வங்கிக் கணக்குகளை முடக்கினர். இதனால் அவர்கள் மோசடி செய்த தொகை ரூபாய் 40 லட்சத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து நீதிமன்றம் மூலம் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 40 லட்சத்தை சித்த வைத்தியர் சந்திரசேகரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் பணம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News