கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட தனிப்படையினர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சயான் மற்றும் மனோஜ்சாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்த நிலையில், சந்தோஷ்சாமியிடம் விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பபட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த சம்மனை ஏற்று சந்தோஷ்சாமி இன்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். இன்று காலை சிபிசிஐடி அலுவலகத்தில் மனோஜ்சாமி ஆஜரான நிலையில், அவரிடம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகசாமி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். ஏற்கனவே சயான் மற்றும் மனோஜ் சாமி ஆகியோரிடம் விசாரணை நிறைவடைந்து இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது நபராக சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.