கோவையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைத்த லஞ்ச பணம்
1996ம் ஆண்டு தனது வீட்டிற்கு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் இப்போது திரும்ப கிடைத்து உள்ளது.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கதிர்மதியோன். இவர் நுகர்வோர் தொடர்பான பல்வேறு வழக்குகளை தொடுத்திருப்பதோடு, சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். கடந்த 1996ம் ஆண்டு தனது வீட்டிற்கு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்காக அவர் மின்வாரிய அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார். அப்போது 500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அந்த அதிகாரி கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்த கதிர்மதியோன், நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு 50 ரூபாய் நோட்டுகள் என ரசாயனம் தடவிய 500 ரூபாய் பணத்தை அந்த அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த அதிகாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கில் சாட்சியமாக கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2001ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருப்பினும் கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் அவருக்கு திரும்ப வழங்கப்படவில்லை. இது தொடர்பாக 2007ம் ஆண்டு அவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு பலமுறை விசாரிக்கப்பட்ட நிலையில், கதிர்மதியோனை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 500 ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான கதிர்மதியோனிடம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கதிர்மதியோன், ”சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு லஞ்சமாக கொடுத்த பணம் திரும்ப கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நீதித்துறையின் இந்த தாமதம் சற்றே கவலை அளிக்கிறது. லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க பெரும்பாலானவர்களும் தயங்குவதற்கு இதுவே காரணமாக அமைந்து விடுகிறது. தங்கள் சொந்த பணத்தை கொடுத்துவிட்டு, அதனை திரும்பப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் விரைவாக பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.” என்றார். கதிர்மதியோனிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.