ஒரு கட்சியை அழித்து வளர பாஜக நினைக்காது - வானதி சீனிவாசன்
ஒரு கட்சியை அழித்து பாஜக வளர நினைக்காது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை சி.எம்.சி. காலணி பகுதியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், “மாநகராட்சி முறையாக குப்பை எடுக்காததால், குப்பை தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறி வருகிறது. இது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம். அதன் பின்னரும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், போராட்டம் நடத்துவோம்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்கிறது. இதனால் நிலம் எடுத்தும் மத்திய அரசினால் பணிகளை துவக்க முடியவில்லை. பின்தங்கிய மாநிலங்கள் கூட தமிழகத்தை முந்தி செல்கின்றன. விமான நிலைய விரிவாக்கம் செய்யாததால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இண்டி கூட்டணி மீண்டும் யுபிஏ ஆக மாறிவருகிறது.
பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை அளித்துள்ளார். எல்லா மாநிலங்களுக்கும் முறையாக மத்திய அரசு வரி வருவாயை பகிர்ந்து அளித்து வருகிறது. தமிழகத்திற்கு நிதி குறைவாக கொடுக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களை விட அதிக நிதி தமிழகத்திற்கு தான் தரப்படுகிறது. கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகள் தான் தமிழகத்திற்கு அதிக வருமானம் தருகிறது. அதனால் அந்த வரி வருவாயை முழுமையாக கொங்கு பகுதிக்கே திருப்பி தாருங்கள் என கேட்க முடியும்.
உத்தரகாண்டில் தேர்தல் வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி கிடைக்க செய்யும் சட்டம். மதபாகுபாடு இல்லாமல் பெண்களுக்கு சொத்து, திருமணம் போன்றவற்றில் நீதி கிடைக்க இந்த சட்டம் வழி வகை செய்யும். பெண்கள் பாதுகாப்பிற்கு பொது சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும்.
ஒரு கட்சியை அழித்து ஒரு கட்சி வளர வேண்டும் என பாஜக நினைக்காது. ஒரு கட்சியை வளர்ப்பது என்பது இன்னொரு கட்சியை அழிப்பது என பொருள் அல்ல. நான் தனிப்பட்ட தாக்குதல்களை ஒத்து கொள்வதில்லை. யார் எல்லாம் கட்சியில் சேர விரும்புகிறார்களோ அவர்களை கட்சியில் சேர்க்கிறோம். எந்த வயதுக்காரராக இருந்தாலும், அவருக்கான அனுபவம், தொடர்பு ஆகியவற்றை பயன்படுத்த முடியும். ஒருவரை வயதை காரணம் காட்டி இழித்து பேச கூடாது. அதிமுக தலைவர்கள் பாஜகவினரை கடுமையாக விமர்சிக்க கூடாது.
கருத்து கணிப்புகள் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்கிறது என்பதை காட்டுகின்றன. பாஜக புறக்கணிக்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து வருகிறது. பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர விரும்பும் கட்சிகளையும், தனிநபர்களையும் கூட்டணியில் சேர்த்து கொள்வோம். பிரதமர் மோடியை எதிர்த்தவர்கள் எல்லாம், தற்போது கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். காஷ்மீர் முஸ்லீம் கட்சிகள், வடகிழக்கு மாநில கிறிஸ்தவ கட்சிகள் பாஜக கூட்டணியில் உள்ளன. கூட்டணியை முடிவு செய்ய 24 மணி நேரம் போதும். தமிழகத்தில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.