கோவையில் குண்டு வெடிப்பு நினைவு தூண் அமைக்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை

கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு நினைவு தூண் அமைக்கவேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை வைத்துள்ளது.;

Update: 2024-02-13 12:58 GMT

கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து மலர் அஞ்சலி மற்றும் பொதுக்கூட்டம் நாளை நடைப்பெறுகிறது. இந்த நினைவு தினத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் முன்பு நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்ப்டடு உள்ளது.

இந்த குண்டு வெடிப்பு பா.ஜ.க. தலைவருக்கு எதிராக செய்யப்பட்ட சம்பவம் மட்டும் கிடையாது. கோவை மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளான ரயில் நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனைகள், சந்தைகள் போன்ற பகுதிகளில் அனைத்து தரப்பு பொதுமக்களையும் குறி வைத்து வெடிக்குண்டு வைக்கப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜாதி பேதம் இல்லாமல், மத பேதம் இல்லாமல் ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த மக்களையும் குறி வைத்து தாக்கியுள்ளனர். அதில் 58க்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்ட நபர்கள் இன்றுவரை உடல் ஊனமாக உள்ளனர். 20 ஆண்டுகாலம் கோவையில் பொருளாதாரம் பின்னோக்கி சென்றுவிட்டது. இந்த சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது. வருகின்ற காலத்தில் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது என்பதற்காக இந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

நாளைய தினம் 1998 குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு 26 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி பா.ஜ.க. சார்பில் ஆர். எஸ். புரம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற உள்ளது. மேலும் இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும்  இந்து முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News