கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆஜரான பா.ஜ.க. நிர்வாகி

கோவை பாஜக நிர்வாகி செல்வகுமார் இன்று கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.;

Update: 2024-02-21 10:24 GMT

பாஜக நிர்வாகி செல்வகுமார்கோவை  சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு வந்து சென்றார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி 1998 ஆண்டு நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் பாஜக மாநில தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் என்பவர் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். அதில் ‘கோவை மன்னிக்காது’ என்ற ஹாஸ்டேக் உடன் கோவை அரசியல் களத்தில் குண்டு வெடிப்பு குற்றவாளி மகிழ்ச்சியாக என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு குண்டு வெடிப்பு கைதிகள் விடுதலைக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த பதிவு தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இது குறித்த விசாரணைக்காக கடந்த 19ஆம் தேதி செல்வகுமாருக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று செல்வகுமார் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜரானார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் பாதிப்பு தொடர்பாகவும், குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கான புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாகவும், இணையத்தில் கோவை மன்னிக்காது என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ததாக தெரிவித்தார்.

மேலும் 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு மற்றும் 2022 ஆம் ஆண்டு நடந்த கார் வெடிப்பு சம்பவம் ஆகிய இரண்டு சம்பவங்களும் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக ட்ரெண்ட் செய்ததாகவும், கோவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் ட்ரெண்ட் செய்ததாகவும், வேறு எந்த உள் நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார். தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மதக் கலவரத்தை தூண்டும் நோக்கில் பதிவு செய்ததாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், இணையத்தில் இருந்த பதிவுகளை தொகுத்து வழங்கியதாகவும், மதக் கலவரத்தை தூண்டும் நோக்கில் பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்த செல்வகுமார், கோவையின் பாதுகாப்பு கருதிதான் பதிவு செய்ததாகவும், போலீசார் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளித்ததாகவும், தான் கூறிய பதில்களை எழுத்துப்பூர்வமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செல்வகுமார், மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது தன்னை வருமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளதாகவும் இதுவரை தன்னிடம் முதல் தகவல் அறிக்கை வழங்கப்படவில்லை எனவும், கோவையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்ற எண்ணத்தில் பதிவு செய்யவில்லை என தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகளாக கோவையில் பாஜகவை சேர்ந்த எம்.பி. இல்லை என்று கூறிய அவர், தற்பொழுது உள்ள கோவை எம்பி கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர் எனவும், இவரால் கோவை வளர்ச்சி தடையாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News