பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ஆண்டு முழுதும் வரும் 12 அமாவாசைக்கு விரதமிருந்து, முன்னோர்களுக்கு தர்பணம் செய்தால் வீட்டில் அமைதி நிலவும் என்பது ஐதீகம்
கோயம்புத்தூர் பேரூர் நொய்யல் படித்துறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
ஆடி அமாவாசை தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிக அவசியமாகும். இந்த நாட்களில் கொடுக்கப்படும் தர்ப்பணம் நேரடியாக நமது முன்னோர்களை சென்றடையும் என்பது ஐதீகம்.
ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளிலும் விரதமிருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் வீட்டில் அமைதி நிலவும். சுப காரியங்கள், வளர்ச்சியில் இருக்கும் தடைகள் நீங்கும். ஆடி அமாவாசை நாள் என்பது பித்ருலோகத்தில் இருந்து நமக்கு ஆசி வழங்குவதற்காக நம்முடைய முன்னோர்கள் புறப்படும் காலமாகும். இந்த நாளில் நாம் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபடுவதால் அவர்களின் மனம் குளிர்ந்து, நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பதும் ஐதீகமாக உள்ளது.
இதில் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது கட்டாயமாக கருதப்படுகிறது. அதற்கென வரைமுறை, நேர வரையறை ஆகியன உள்ளன. இந்த நிலையில்ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று பேரூர் நொய்யல் படித்துறையில் முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் நொய்யல் படித்துறையில் திரண்ட காணப்பட்டது. ஆங்காங்கே படையலிட்டு அமர்ந்து தர்பண வழிபாடுகளை நடத்தினர்.
தங்கள் முன்னோர்களின் பெயரைச் சொல்லி, எள், உருண்டை, பச்சரிசி சாதம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை படைத்து, அவர்களை நினைத்து மனமுருகி வழிபட்டனர். மேலும், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்தும் தீபாராதனை செய்தும் முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் எள் உருண்டை மற்றும் பச்சரிசி சாதத்தை காகங்களுக்கு வைத்தனர். காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம். அவர்கள்நினைத்தபடியே காகங்கள் அங்கு வந்து சாப்பிட்டதால் அவர்கள் பக்தி பரசவம் அடைந்தனர்.
இந்த அமாவாசையை பொறுத்தவரை ஆடிமாத்தின் 2-வது அமாவாசையாகும். கடந்த அமாவாசையோடு ஒப்பிடும்போது, இந்த அமாவாசைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவை மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஏராளமானோர் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வராததால், பக்தர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, பேரூர் பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே தற்காலிக தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் தர்ப்பண வழிபாட்டுக்கு வரும் பொதுமக்கள் தாங்கள் கொடுக்கும் தர்ப்பண இலைகளை ஆங்காங்கே விட்டு செல்வதை தடுக்கும் வகையில், பேரூர் பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சார்பில், ஆங்காங்கே பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும் போடப்பட்டிருந்தது.