திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இறைச்சி விற்பனைக்கு தடை

ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவது வழக்கம்

Update: 2024-01-11 12:15 GMT

கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. தை மாத முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும், விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் அறுவடை பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. வருகின்ற ஜனவரி 16 ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவது வழக்கம். அதேபோல வருகின்ற 25 ம் தேதி வள்ளலார் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்தி ரோடு, போத்தனூர், அறுவைமனைகள், மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News