கோவை மாவட்ட அரசுபள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம்
அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற பெயரில் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட ஏப்-17- ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும். மேலும் மாணவர்கள் உயர்கல்வி பயில மாதந்தோறும் தமிழக அரசு ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட திட்டங்களை பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் எடுத்துக் கூறி மாணவர்கள் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பேரணி மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளிலும் இதேநிலை நீடிக்கிறது.வருகிற கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட ஏப். 17-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும் என தொடக்க கல்வித் துறை இயக்குனர் அறிவொளி அறிவுறுத்தியுள்ளார்.
அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற பெயரில் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், காற்றோட்டமான வகுப்பறை, குடிநீர், கழிப்பிட வசதி, தகுதியான ஆசிரியர்கள் போன்றவற்றை விளக்கி இப்பேரணி நடத்த வேண்டும்.பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பேரணி மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீதம் முன்னுரிமை, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சத வீதம் முன்னுரிமை, பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 போன்ற முன்னுரிமை குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் ஏப்-17 முதல் 28 -வரைஆசிரியர்கள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடத்த மாவட்டக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முனைப்புடன் தயாராகி வருகின்றனர்.