போலீஸ் அக்கா திட்டம் குறித்து பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வு
கோவையில் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு உதவும் வகையில் காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது;
போலீஸ் அக்கா திட்டம் குறித்து பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் பங்கேற்றார்.
கோவையில் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு உதவும் வகையில் காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண் போலீசார் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அதன்படி இன்றைய தினம் கோவையில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியில் போலீஸ் அக்கா திட்டம் குறித்தான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களிடையே இத்திட்டம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் மாணவ மாணவிகள் வாழ்வில் முன்னேறுவதற்கான பல்வேறு அறிவுரைகளை எழுச்சி உரைகளாக ஆற்றினார். மேலும் காவல்துறையினர் பொதுமக்களுக்காகவும் மாணவர் மாணவிகளுக்காகவும் எடுத்து வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
கோவை மாநகர காவல் துறை சாா்பில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளை பாதுகாத்திட பல்வேறு புதிய முயற்சிகள், நடவடிக்கைகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள 60 கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் உளவியல், பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் ‘போலீஸ் அக்கா’ (Police Akka) என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு காவல் துறையில் முன்மாதிரி திட்டமாக ‘போலீஸ் அக்கா’ என்ற புதிய திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு மகளிர் காவலர் தொடா்பு அலுவலராக நியமிக்கப்பட்டு மாணவிகளுடன் கலந்துரையாடுவது மற்றும் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு ஏற்படும் உளவியல், பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காண்பார்.
மேலும் கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும், சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு கொண்டுச் சென்று தீா்வு காண்பார். அதேப்போல் கல்லூரி மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக செயல்பட்டு அவா்கள் தரும் தகவல்களை ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் இந்த பெண் காவலா்கள் ஈடுபடுவாா்கள்.
கோவை மாநகர காவல் ஆணையா் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை ஆணையர் பாலகிருஷ்ணன் அண்மையில் தொடங்கி வைத்தார். இதில் காவல் துணை ஆணையா் சுஹாசினி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், கோவை மாநகரில் உள்ள 60 கல்லூரிகளின் நிா்வாகிகள், போலீஸ் அக்கா திட்டத்தில் பணியாற்ற உள்ள 37 பெண் காவலா்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகவும் மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.