நில மோசடி செய்த அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி தற்கொலை முயற்சி ; ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
அதிமுக எம்எல்ஏ கே ஆர் ஜெயராம், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நிலத்தை அபகரித்துள்ளனர்.
கோவை கீரணத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது வாரிசுதாரர்கள் 30 பேர் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காளிகோனாருக்கு சொந்தமான அந்த இடத்தை சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ஜெயராம், பாஜக முன்னாள் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீவாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்று வருவதாக கூறி சில தினங்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அந்த நிலத்தை விற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தங்கள் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காளி கோனாரின் வாரிசுதாரர்கள் திரண்டு புகார் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது வாரிசுதாரரான ஒரு பெண் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் காவல்துறையினர் அவரை தடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். இது குறித்து பேசிய அவர்கள் உடனடியாக மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நிலம் சம்பந்தமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடாத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர். மேலும் தங்களை அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் தெரியுமா என கேள்வி எழுப்பிய அவர்கள் ஹிந்தியில் சத்தமாக அவர்களது கோரிக்கையை முன்வைத்தனர்.மேலும் அதிமுக எம்எல்ஏ கே ஆர் ஜெயராம், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி அனைவரையும் திருடர்கள் என சாடிய அவர்கள் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.