கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி

மனு கொடுப்பதற்காக வந்த மூதாட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-01-08 10:26 GMT

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி பழனியம்மாள்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை  மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது கோவை ராமாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது81) என்ற மூதாட்டி கணவர் இல்லாத நிலையில் வயது முதிர்வு காரணமாக கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும், தனக்கு அரசின் முதியோர் உதவித் தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் அவர்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து இருந்தனர். வரிசையில் நின்ற பொதுமக்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று மனு கொடுத்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் வரிசையில் நின்று கொண்டிருந்த மூதாட்டி  பழனியம்மாள்  திடீரென்று  மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை கண்ட பொது மக்கள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உதவியுடன் 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாரந்தோறும் நடைபெறும் இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் முதியோர்கள் மனுவை பெறுவதற்காக தனி அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

நீண்ட நேரம் வரிசையில் நின்று கொண்டிருந்ததன் காரணமாகவும், வயது மூப்பினால் ஏற்பட்ட சோர்வின் காரணத்தாலும்  பழனியம்மாள் மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு சற்று நேரத்திற்கு முன்னர் தான் பட்டா கிடைக்காத விரக்தியில் சண்முக சுந்தரம் என்ற நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். ஒரே நாளில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

Tags:    

Similar News