ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
குட்டி யானை உறங்க, பாதுகாப்பிற்காக அதனைச் சுற்றி 3 யானைகள் படுத்து உறங்கியுள்ளன.;
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி, உடுமலை, டாப்சிலிப், வால்பாறை, மானம்பள்ளி உள்ளிட்ட ஆறு வனசரகங்கள் 960 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது.
இந்த வனப்பகுதிகள் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களாக கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி நிலவி வந்தது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகல் வறண்டு காணப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பசுமை மீண்டும் திரும்பி வருகிறது.
இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஒரு காட்டு யானைக் கூட்டம் உலா வருகிறது. குட்டியுடன் உலா வரும் இந்த யானைக் கூட்டம், அடர் வனப்பகுதியில் ஒரு இடத்தில் ஓய்வெடுத்துள்ளன. அப்போது குட்டி யானை உறங்க, பாதுகாப்பிற்காக அதனைச் சுற்றி 3 யானைகள் படுத்து உறங்கியுள்ளன.
குட்டி யானை உட்பட 4 காட்டு யானைகள் தரையில் படுத்து கால் நீட்டி உறங்க, ஒரு பெண் யானை உறங்கும் யானைகளுக்கு காவலாக நின்றிருந்தது. இந்த அழகிய காட்சிகளை அப்பகுதியில் இருந்த புகைப்படக்கலைஞர் வீடியோ எடுத்துள்ளார். இந்தக் காட்சிகளை தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.