சூரிய ஒளியை பயன்படுத்தி காகிதத்தில் ஜல்லிக்கட்டு ஓவியம் வரைந்த நகை வடிவமைப்பாளர்

பூதக்கண்ணாடியை கொண்டு சூரிய ஒளியை காகிதத்தில் பாய்ச்சுவதன் மூலம் ஏற்படும் நெருப்பில் ஜல்லிகட்டு ஓவியத்தை வரைந்துள்ளார் கோவை நகை வடிவமைப்பாளர்.

Update: 2024-01-14 09:01 GMT

கோவை நகை மதிப்பீட்டாளர் காகிதத்தில் வரைந்துள்ள ஜல்லிக்கட்டு ஓவியம்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யு.எம்.டி. ராஜா. தங்க நகை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார். மேலும் இவர் ஓவியங்கள் மற்றும் தங்கத்தில் சிலைகள் வடிவமைப்பதில் பல்வேறு புதுமைகளை புகுத்தி பல்வேறு கலை படைப்புகளை உருவாக்குவதை வழக்கமாக செய்து வருகிறார். அதேபோல இவர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்கத்தில் சிற்பங்கள் செய்வது, ஓவியங்கள் வரைவது போன்ற வித்தியாசமான முயற்சிகளை செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை(15ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே பல்வேறு பகுதிகளிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில்  பொங்கல் விழாஆட்டம் பாட்டத்துடன் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையின் முக்கியமான நிகழ்வாக தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை  மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் ஜல்லிக்கட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவை யு.எம்.டி ராஜா வித்தியாசமான முறையில் ஒரு படத்தை வரைய வேண்டுமென நினைத்துள்ளார்.

அதன்படி பூதக்கண்ணாடியை கொண்டு சூரிய ஒளியை காகிதத்தில் பாய்ச்சுவதன் மூலம் ஏற்படும் நெருப்பில் ஜல்லிகட்டு ஓவியத்தை வரைந்துள்ளார். இதில் ஜல்லிக்கட்டு காளையும் மாடு பிடி வீரரும் இடம்பெற்றுள்ளனர். இதற்காக 7 மணி நேரம் எடுத்து கொண்டுள்ள இவர் தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு பறைசாற்ற வேண்டுமென வரைந்ததாக தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டிற்காக அவர் எடுத்துள்ள இந்த முயற்சி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து உள்ளது.

Tags:    

Similar News