700 வங்கி கணக்குகள்.. 100 யுபிஐ ஐடி,, 2 நாளில் ரூ.2.25 கோடி மோசடி: வடமாநில கும்பல் கைது
கைது செய்யாமல் இருக்க அபராதமாக வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை உடனே அனுப்ப வேண்டும் எனவும் சிலர் போனில் கூறியுள்ளனர்.;
கோவை ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். 75 வயதான இவரது ஆதார் கார்டு எண்ணை பயன்படுத்தி மும்பையில் வங்கி கணக்கு துவங்கி மோசடி செய்திருப்பதாகவும், அந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க அபராதமாக வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை உடனே அனுப்ப வேண்டும் எனவும் சிலர் போனில் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய ஜார்ஜ் தனது வங்கி கணக்கில் இருந்த 67 இலட்ச ரூபாய் பணத்தை அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தொடர்ந்து அந்த நபர் மிரட்டியதால் மற்றொரு வங்கிக் கணக்கில் இருந்து 10 இலட்ச ரூபாய் பணத்தை அனுப்ப வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கி மேலாளர் எதற்காக பணம் எடுக்கிறீர்கள் என கேட்ட போது, அவர் நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர், இது ஏமாற்று வேலை எனவும், சைபர் க்ரைம் காவல் நிலையத்திற்கு சென்று உடனடியாக புகார் தெரிவிக்கவும் கூறியுள்ளார். இதையடுத்து ஜார்ஜ் கோவை சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரவிக்குமார் சர்மா, முகுல் சந்தேல், அனில் ஜாதவ் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு சென்று ரவிக்குமார் சர்மா, முகுல் சந்தேல், அனில் ஜாதவ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மடிக்கணினி, செல்போன், சிம் கார்டு, வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை செய்ததில், இந்த வழக்கில் தொடர்புடைய வங்கிக் கணக்கில் 12 மாநிலங்களில், 52 சைபர் க்ரைம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவாகியுள்ளதும், பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நபர்களின் பெயரில் 700க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளையும், 100 க்கும் மேற்பட்ட யுபிஐ ஐடிகளையும் 2 நாட்களில் மட்டும் சுமார் 2.25 கோடி அளவிற்கு பணப்பரிமாற்றம் செய்ததும் கண்டறியப்பட்டது.
இந்த கும்பல் மோசடி பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதற்காக பல்வேறு வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததும், மோசடிக்காக பயன்படுத்திய வங்கிக்கணக்குகள் பல்வேறு மாநில காவல் துறையினரால் முடக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டதும் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் என்ற இடத்தில் ஆன்லைன் சைபர் க்ரைம் தொடர்பான மோசடிகளில் ஈடுபடுவதற்கான பயிற்சிகளை பெற்றதும் தெரியவந்தது.
இவர்கள் பொது மக்களை சைபர் க்ரைம் அதிகாரிகளை போல் ஸ்கைப் மற்றும் வீடியோ காலில் அழைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் ஒரு பகுதியாகவும், மோசடி பணத்தை மிக விரைவாக பல்வேறு விதமான சிம் கார்டுகளை பயன்படுத்தியும் ஆன்லைன் ஆப்களை பயன்படுத்தியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் கும்பல் ஒரு பகுதியாகவும் செயல்படுவதும் தெரியவந்தது.
மேலும் இந்தக் கும்பல் ராஜஸ்தான் மற்றும் ஜெய்பூர் பகுதிகளில் இயங்கி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்கட்டமாக 8 இலட்ச ரூபாய் பணத்தை மீட்டுத்தர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், படிப்படியாக வேறு வங்கிகளில் இருந்து இழந்த பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.