சென்னை மணலியில் ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சென்னை அருகே மணலியில் ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.;
சென்னை மணலி பார்த்தசாரதி தெருவில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான அலுமினிய குடோனில் மண்ணடியை சேர்ந்த முகமது அவரது சகோதரர் சையது என்பவர் வாடகைக்கு எடுத்து மரவேலைகள் செய்து வந்துள்ளனர். நேற்று நள்ளிரவு சென்னை நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு உதவி வனபாதுகாவலர் மகேந்திரனுக்கு, மணலி பார்த்தசாரதி தெருவில் உள்ள குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை வனகாவல் நிலைய வனசரக அலுவலர் ராஜேஷ் தலைமையில் வன பாதுகாவலர்கள் மற்றும் மணலி கிராம நிர்வாக அலுவலர் டெல்லி கணேஷ் ஆகியோர், குடோனை இன்று காலை 7 மணி அளவில் திடீர் சோதனை செய்துனர். அப்போது குடோனில் சுமார் 3 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பிரத்தியேக முறையில் செம்மரக்கட்டைகளை அய்யனார் குதிரை சிலை, பூதம் சிலை, விநாயகர் சிலைகள் இரண்டு சிங்கம் முகம் கொண்ட யானை சிலை, யாழி போன்ற ஆறுவகை சிலைகள் செதுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த செம்மரக்கட்டைகளை வனபாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், குடோனை வாடகைக்கு எடுத்த முகமது சையது மற்றும் கூட்டாளிகளை தேடி, வனச்சரக அலுவலர்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றபோது, அவர்கள் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் ரூ.2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.