புழல் ஏரி கால்வாயில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு: கரையாேரம் உபரி நீர் புகும் அபாயம்
புழல் ஏரி உபரி நீர் வரும் கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் ஆக்கிரமித்திருப்பதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.;
வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க தமிழக முதல்வர் கடந்த ஒரு மாதமாக பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் ஆய்வுகளும் நடத்தி அதற்கான பணமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக புழல் ஏரி நிரம்பினால் உபரி நீர் வரும் வழியில் உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க சொல்லி அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகளையும் முதல்வர் நேரடியாக வந்து கடந்த மாதம் பார்வையிட்டு இருந்தார்.
உபரி நீர் காவாங்கரை வடபெரும்பாக்கம் மணலி சடயங்குப்பம் வழியாக எண்ணூர் கடலில் கலக்கும். மணலியில் தரைப்பாலம் அருகே தமிழக முதல்வரும், அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் ஆகாயத்தாமரை அகற்றுவதையும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதையும் பார்வையிட்டு சென்றனர்.
முதல்வர் வரும்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அந்த பணிகள் முழுமையாக நடைபெற்றதா என தெரியவில்லை. தற்போது புழல் ஏரி உபரி நீர் வரும் கால்வாயில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் இருப்பதால் தண்ணீரில் போக்கு மெதுவாக உள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பாெதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் விரைந்து ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.