மாதவரம் கைலாசநாதர் கோவிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
மாதவரம் கைலாசநாதர் திருகோயிலில் அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
சென்னை மாதவரம் சிவன்கோயிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ள கோயில் குளத்தை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார்.
சென்னை மாதவரத்தில் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து இங்கு வீற்றிருக்கும் சிவனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த கோவில் வாசலில் உள்ள திருக்குளத்தை ரூ.2 கோடி செலவில் சீரமைக்க தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதன்படி இந்த பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இதற்கான பணிகளை இந்து அறநிலையத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை மாதவரம் கைலாசநாதர் திருக்கோவில் மற்றும் கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.
அமைச்சருடன் சென்னை வட கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் பிரியா, உதவி ஆணையர் ஜோதிலட்சுமி,திமுக நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், புழல் நாராயணன், திருவொற்றியூர் பகுதி செயலாளர் தி.மு. தனியரசு, நாஞ்சில் ஞானசேகர் உள்பட பலர் உடன் சென்றனர்.