234 எம்.எல்.ஏ பதவிக்கு, 3998 வேட்பாளர்கள் போட்டி
தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ பதவிக்கு அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் என 3998 பேர் போட்டியிடுகின்றனர்.;
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில்அரோரா கடந்த பிப் 26ம் தேதி அறிவித்தார். அதன்படி ஏப் 6ம் தேதி வாக்கு பதிவும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. கடந்த 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
19ம் தேதி மனு தாக்கல் நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட 7255 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்பின்னர் 20ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது விதிமுறைகளை பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மனுக்கள் பரிசீலனை முடிந்தபின்னர், மனுக்களை திரும்ப பெறுவோருக்கு, 22ம் தேதி மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.சுயேட்சை வேட்பாளர்கள் அதிகமானோர் மனுக்களை வாபஸ் பெற்றனர். கட்சிகளின் மாற்று வேட்பாளர்களும் மனுக்களை திரும்ப பெற்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 3998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், ஆண் வேட்பாளர்கள் -3585 பேரும், பெண் வேட்பாளர்கள்- 411 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 2 பேரும் என 234 எம்.எல்.ஏ பதவிக்கு 3998 பேர் போட்டியிடுகின்றனர்.