எடப்பாடியுடன் அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு - சேலத்தில் பரபரப்பு

தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்தது, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-05-03 13:17 GMT

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நேற்று, தமிழகம் முழுவதும் 75 மையங்களில் நடைபெற்றது.

இதன் முடிவில், திமுக கூட்டணி 159 இடங்களையும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றியது. அதிமுக அரசு பெரும்பான்மையை இறந்ததை அடுத்து, முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை இன்று காலை ஆளுநருக்கு அனுப்பினார்.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே சி கருப்பணன், கேபி அன்பழகன், முனுசாமி, சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும், அதிமுக வேட்பாளர்கள் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இல்லத்தில், எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றனர். ஈ.பி.எஸ். உடன் அவர்கள் கலந்தாலோசனை நடத்தினர். 
எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக அமரவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags:    

Similar News