அதிமுக கூட்டணிக்கு தித்திப்பை தந்த மாங்கனி மாவட்டம்- 10 தொகுதிகளை அள்ளியது

சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

Update: 2021-05-03 12:47 GMT

சேலம் மாவட்டத்தில்,  சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி, எடப்பாடி, கெங்கவல்லி (தனி), ஏற்காடு (எஸ்.டி.), ஆத்தூர் (தனி), மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய 11 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள், கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, அம்மாபேட்டை கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவனம், தலைவாசல் மாருதி கல்வி நிறுவனம் ஆகிய இடங்களில்  எண்ணப்பட்டன.

முடிவில் சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. சேலம் வடக்கு தொகுதியில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றது. அதாவது எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.), சங்ககிரி தொகுதியில் சுந்தரராஜன் (அ.தி.மு.க.), ஆத்தூர் (தனி) தொகுதியில் ஜெய்சங்கரன் (அ.தி.மு.க.), கெங்கவல்லி (தனி) தொகுதியில் நல்லதம்பி (அ.தி.மு.க.), வீரபாண்டி தொகுதியில் ராஜமுத்து (அ.தி.மு.க.), ஏற்காடு (தனி) தொகுதியில் சித்ரா (அ.தி.மு.க.), சேலம் தெற்கு பாலசுப்பிரமணியன் (அ.தி.மு.க.), ஓமலூர் தொகுதியில் மணி (அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர். 

இதே போல மேட்டூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சதாசிவம், சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அருள் ஆகியோர் வெற்றி பெற்றனர். சேலம் வடக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர்  ராஜேந்திரன் கைப்பற்றினார். இவர் இதே தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News