கல்குவாரி வெடியால் வீடுகளில் விரிசல்: லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் முற்றுகை

கல்குவாரி வெடியால் வீடுகளில் விரிசல்: லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் முற்றுகை
X

அனுமதியின்றி கற்களை ஏற்றிய லாரியை சிறைப்பிடித்த கிராம மக்கள் 

ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சியில் கல்குவாரி வெடியால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட தாங்கல் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மலைகளில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது.

இந்த கல்குவாரியில் இருந்து கட்டட பணிகளுக்காக வேலூர், குடியாத்தம், ஒடுகத்தூர், அணைக்கட்டு, பள்ளிகொண்டா போன்ற பகுதிகளுக்கு ஜல்லி கற்கள், பாறைகள், கருங்கற்களை டிப்பர் லாரி மூலம் இரவு, பகலாக ஏற்றி செல்கின்றனர். அவ்வாறு, ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு உரிய அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும், இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் லாரிகள் இயக்கப்படுவதால் சுற்றியுள்ள வீடுகள் முழுவதும் தூசி படிவதாகவும், குவாரியில் வைக்கப்படும் வெடியால் பூமி அதிர்ந்து வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் எங்கள் ஊரே மாசு அடைந்த நிலையில் காணப்படுகின்றது என வேதனை தெரிவித்தனர்.

அதேபோல், அதிவேகமாக இயக்கப்படும் டிப்பர் லாரிகளால் அவ்வப்போது விபத்துகள் நடந்து உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கல்குவாரியில் அனுமதியின்றி டிப்பர் லாரிகளில் கற்களை ஏற்றி கொண்டிருந்த போது பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் கிரிதரனிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவருடன் சேர்ந்து பொதுமக்கள் டிப்பர் லாரிகளை சிறைபிடித்து குவாரியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் ராமலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி சிவமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார். மேலும், அனுமதியின்றி இயங்கி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த ஒரு லாரி மட்டுமின்றி கல்குவாரிகளில் அனுமதியின்றி இயங்கி வரும் இன்னும் பல டிப்பர் லாரிகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சியில்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்