65 வயதில் 90 வயது மாமன் மடியில் வைத்து காதுகுத்து: கறிவிருந்துடன் அமர்க்களம்
65 வயதில் காது குத்து
தமிழ் சினிமாவில் மொய் வசூல் செய்ய வாலிப வயதில் காதுகுத்து விழா நடத்துவது போல காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதைபோல அனைவரும் வியக்கும் வகையில் 65 வயது முதியவர், அவரது சகோதரருக்கும் காதுகுத்து விழா நடத்தி ஆட்டுக்கறி விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மருதுவல்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் முனிவேல் (வயது60) கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
முனிவேலுடன் பிறந்தவர்கள் ராஜா (55) உள்பட 5 சகோதரர்களும், 3 சகோதரிகள் என மொத்தம் 8 பேர் உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மூத்த சகோதரர்களான முனிவேல் மற்றும் ராஜா ஆகியோருக்கு அவரது பெற்றோர் காது குத்து விழா நடத்தவில்லை. மற்றவர்களுக்கு அவரது பெற்றோர் திருப்பதிக்கு அழைத்துச் சென்று சிறுவயதிலேயே மொட்டை அடித்து காது குத்து விழா நடத்தியுள்ளனர்.
இதனால் முனிவேல் மற்றும் ராஜா ஆகியோரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் காது குத்தாதவன் என அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் ஒன்றிணைந்து 2 பேருக்கும் காது குத்து விழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி முனிவேல் மற்றும் ராஜா குடும்பத்தினர் மருதவல்லிபாளையம் கிராமத்தில் உள்ள அவர்களது குலதெய்வம் கோவிலான கன்னிக்கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து கிடா வெட்டி பூஜை செய்தனர்.
உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் முனிவேல் மற்றும் ராஜா ஆகியோருக்கு, அவர்களது 90 வயது தாய் மாமனான தங்கவேல் மடியில் உட்கார வைத்து தடப்புடலாக காது குத்து நடந்தது. பம்பை வாத்தியம் மற்றும் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையுடன் ஊர்வலமாக சென்றதை கிராம மக்கள் அதிசயமாக வேடிக்கை பார்த்தனர். விழாவில் ஏராளமானோர் குவிந்ததால் விழாக்கோலம் பூண்டது. காது குத்து விழாவுக்கு வந்த உறவினர்கள் 50-க்கும் மேற்பட்ட வகை வகையான சீர்வரிசை தட்டுகளை வைத்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆட்டுக்கறி விருந்து பரிமாறப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டி போட்டு மொய் எழுதினர். குடும்பத்தினருடன் காது குத்தி கொண்ட முனிவேல் மற்றும் ராஜா ஆகியோர் குதூகலமாக நடந்த விழாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக பொழுதைக்கழித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu