திருவண்ணாமலையில் மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால் பரபரப்பு..!

திருவண்ணாமலையில் மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால் பரபரப்பு..!

மண்டை ஓடுகளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய கார்

அண்ணாமலையார் கோயில் அருகே மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

உலக பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக கருதக் கூடியதுமான அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையாக திருவண்ணாமலை நோக்கி வருகின்றனர். ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகரம் மாட வீதி கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமங்கள் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாதுக்கள் பலர் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் அருகே மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜகோபுரம் முன்பு உள்ள தேரடி வீதியில் முருகர் தேர் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வித்தியாசமான காரில் வரிசையாக மண்டை ஓடுகள் காரின் முன் பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதாவது காரின் முன் பக்கம் டேஷ் போர்டில் மண்டை ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் அந்தக் காரில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு புகைப்படங்களும், பெண்களை முகம் சுளிக்க வைக்கும் புகைப்படமும் வரையப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் திருவண்ணாமலை நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தேரடி தெருவிற்கு வந்த போலீசார் காரில் இருந்த மண்டை ஓடு மற்றும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காரில் இருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டனர். இதனை தொடர்ந்து ஒரு மணி நேரம் கழித்து அந்த காரின் உரிமையாளர் கழுத்து நிறைய ருத்ராட்ச மாலை, நெற்றி நிறைய விபூதி பட்டையுடன் ஒரு அகோரியை போன்று வந்திருந்தார்.

அவரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.அப்போது அவர் என் பெயர் கடவுள். நானே சிவன். நானே பிரம்மா. நானே விஷ்ணு எனக்கூறி உடலில் உள்ள ஆடைகளை களைந்து காவல் நிலையத்திற்குள் செல்ல முயற்சித்ததால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை காருக்குள்ளேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் ரிஷிகேஷ் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், கார் பார்க்கிங் செய்ய இடம் ஏதுமில்லாததால் சாலையிலேயே தனது காரை நிறுத்தி விட்டு கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் பொது மக்களை அச்சுறுத்தியதாகவும் அந்த அகோரி மீது வழக்குப்பதிவு செய்து ரூபாய் 3000 அபராதம் விதித்து அவரை அனுப்பி வைத்தனர். மேலும் காரின் முன் பக்கத்தில் இருந்த மண்டை ஓடுகளை அகற்றும் படியும் கூறினர். இச்சம்பவத்தால் திருவண்ணாமலை மாட வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story