சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கைக்கொடுக்காத 'கை கொடுக்கும் கை' - மகேந்திரனின் கதை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கைக்கொடுக்காத கை கொடுக்கும் கை - மகேந்திரனின் கதை!
X
சினிமாவுக்கு வந்த இயக்குநர் மகேந்திரன், ஆரம்பத்தில் கமர்ஷியல் கதைகளாக எழுதி சவுக்கியமாகதான் இருந்தார். நன்றாக சம்பாதித்துக் கொண்டும் இருந்தார்.

இன்று காலை எஃப்எம்-இல் ‘தாழம்பூவே வாசம் வீசு’ கேட்டபோது, பழைய தகவல்கள் மனதுக்குள் நிழலாடின. அவற்றை உங்களுக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. வாருங்கள் நம் கண்கள் வழியே சினிமாவின் 80களுக்கு சென்று வருவோம்.

சினிமாவுக்கு வந்த இயக்குநர் மகேந்திரன், ஆரம்பத்தில் கமர்ஷியல் கதைகளாக எழுதி சவுக்கியமாகதான் இருந்தார். நன்றாக சம்பாதித்துக் கொண்டும் இருந்தார்.

அவர் முதன்முதலாக இயக்கிய ‘முள்ளும் மலரும்’ படத்தின் கதை, புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றை தழுவி எடுக்கப்பட்டதாலோ என்னவோ, இலக்கியவாதிகள் அவரை சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். போதாக்குறைக்கு அடுத்து ‘உதிரிப்பூக்கள்’ பெற்ற அதிரிபுதிரி இலக்கிய அங்கீகாரம் வேறு.

அதன் பிறகு சினிமாவும் இலக்கியம் என இயக்குநர் மகேந்திரன் நம்ப ஆரம்பித்து விட்டார். அவர் படங்களில் ஏதேனும் அவருக்குத் தெரியாமலேயே கமர்ஷியலாக ஓடிவிட்டால் பதறத் தொடங்கி விட்டார். அப்படியான பதட்டத்தை அவருக்கு ஏற்படுத்தாத வகையில் அவர் இயக்கிய ஒரு தோல்விப்படம்தான் ‘கை கொடுக்கும் கை’.


ரஜினி இருந்தும் இப்படியா?

வசூலில் சூப்பர்ஸ்டாராக நிலைநிறுத்திக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அவ்வப்போது தானும் கமல் ஆக வேண்டும் என்கிற கிறுக்கு மண்டைக்கு ஏறும். அதன் விளைவுகளில் ஒன்று ‘கை கொடுக்கும் கை’. கமல் எப்போதுமே கிறுக்குதான் என்பதால் அவருக்கு வணிக வெற்றி, தோல்விகளை பற்றி கவலையில்லை. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் கால்ஷீட் கிடைத்துவிட்டது. படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமென்று முத்திரை குத்தி விடுவார்களோ, இயக்குநர் மகேந்திரன் டச்சை மறந்துவிடுவார்களோ என்கிற பதட்டத்தில் இலக்கியத்தரமான கதையை தேடி, ஒரு கன்னடப் படத்தை பிடித்தார் இயக்குநர் மகேந்திரன்.


அந்தப் படம் புட்டண்ணா கனகல் இயக்கிய ‘கதா சங்கமம்’.

‘கதா சங்கமம்’ அந்தக் காலத்திலேயே anthology வகையில் எடுக்கப்பட்ட படம். மூன்று குறும்படங்களை ‘கதைகளின் சங்கமம்’ என்கிற டைட்டிலில் ஒரே படமாக எடுத்தார் கனகல். அதில் ஒரு குறும்படம்தான் ’முனிதாயி’.

பார்வையற்ற பெண்ணுக்கு இந்த நிலையா?


கண் பார்வையற்ற ஒரு பெண். அதிர்ஷ்டவசமாக நல்ல புருஷலட்சணமுள்ள கணவன் கிடைக்கிறான். மகிழ்ச்சியாக வாழுகிறாள். விபத்து மாதிரி அவள் கூட தம்பி மாதிரி பழகிக் கொண்டிருந்த ஒருவனால் பாலியல் மானபங்கம் செய்யப்படுகிறாள்.

திரும்பத் திரும்ப அந்த சம்பவத்தை வைத்து அவளை பிளாக்மெயில் செய்து தன் உடல் பசியை தீர்த்துக் கொள்கிறான் அந்த தம்பி. அவளது வாழ்க்கை நரகமாகிறது. கணவனுக்கு தெரிந்தால் என்னாகுமோ என்று பதறுகிறாள். கணவனுக்கு தெரிகிறது.

ஜஸ்ட் லைக் தட்டாக தன் மனைவியின் கற்பை எடுத்துக் கொண்டு ‘இதெல்லாம் சகஜம்தான்’ என்று மனைவியோடு பழையபடி சந்தோஷமாக வாழுகிறான் கணவன்.

இந்த ‘முனிதாயி’ கதையைதான் நிறையவே விரித்து ‘கை கொடுக்கும் கை’ ஆக எடுத்தார் இயக்குநர் மகேந்திரன்.

ஒரிஜினலில் ரஜினிதான்!

பெருந்தன்மையான கணவனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பார்வையற்ற மனைவியாக ரேவதியும் நடித்தார்கள். ரேவதியை ஒரு பண்ணையார் மானபங்கம் செய்வார். அதை நேரில் கண்ட சின்னத்தம்பி ஒருவன் (சின்னி ஜெயந்த்) தானும் அதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவான் என்று கதை போகும். சூப்பர் ஸ்டார் நடித்திருந்தும் படம் தோல்வியடைந்தது. இந்தக் கதையின் ஒரிஜினலான ‘முனிதாயி’யில் பலாத்காரத் தம்பியாக நடித்தவர் சூப்பர்ஸ்டார்தான்.


தமிழில் ‘அபூர்வ ராகங்கள்’ நடித்தபிறகு, கன்னடத்தில் அவருக்கு கிடைத்த சிறிய நெகட்டிவ்வான வேடம் இது. இந்த வேடத்தைதான் அப்படியே அதன் தன்மை மாறாமல் ‘பதினாறு வயதினிலே’ படத்தில் பரட்டையாக மாற்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யை ஸ்டைல் மன்னனாக தமிழில் நிலைநிறுத்தினார் பாரதிராஜா.

அவர் புட்டண்ணா கனகலிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக 'கை கொடுக்கும் கை’ படத்தின் ஹீரோவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்படத்தின் கன்னட மூலக்கதையில் வில்லனாக நடித்தவர் என்பது பலரும் அறியாதது. 'கை கொடுக்கும் கை’ படத்தை பற்றிய இன்னொரு தகவல் பலரும் அறியாதது.

இந்தப் படத்தை தயாரித்தவர் நடிகர் விஜயகுமார். நடிப்பு வாய்ப்புகள் குறைந்த நிலையில் தயாரிப்பாளராகி, தன்னுடைய நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யின் கால்ஷீட்டை வாங்கி வைத்திருந்தார். பட நிறுவனத்துக்கு கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யின் இஷ்டதெய்வமான ராகவேந்திரா பெயரைதான் வைத்திருந்ததாக நினைவு.

ரஜினிதான் ஆரம்பம்..!

அந்தப் படத்துக்கு மகேந்திரனை இயக்குநராக போடலாம் என்று விஜயகுமாருக்கு ஆலோசனை சொன்னதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான்.


படத்தில் ஹீரோயின் வன்புணர்வு செய்யப்படுகிறார் என்பதை தயாரிப்பாளரான விஜயகுமாராலேயே ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதையடுத்து தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது

பெரிய முதலீட்டை போட்டுவிட்ட நிலையில், இனி எல்லாம் அவன் பார்த்துக்குவான் என்று விரக்தி நிலைக்கு போய்விட்டார் விஜய்குமார். இந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகுதான் மீண்டும் அப்பா, அண்ணன், மாமா என்று குணச்சித்திரப் பாத்திரங்களை ஒப்புக்கொண்டு நடிக்க வந்தார் விஜயகுமார்.

‘கை கொடுக்கும் கை’க்குப் பிறகு நீண்ட காலமாகவே தயாரிப்பு எண்ணம் இல்லாமல் இருந்த விஜய்குமார், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புதான் மகன் அருண்விஜய்க்காக ‘சினம்’ என்கிற படத்தை தயாரித்தார்.

Tags

Next Story