கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நெல்லை ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை

கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நெல்லை ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு வரும் மக்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில், அங்கிருந்து ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு பின்பு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்திருந்த நிலையில், மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. வைரஸ் தொற்றின் பாதிப்பைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, நாட்டிலேயே கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தற்போது, அதிக அளவில் பதிவாகி வரும் நிலையில், அங்கிருந்து வரும் பயணிகளை கண்காணிப்பிற்கு உட்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருகை தரும் மக்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக திருநெல்வேலிக்கு ரயில் மூலம் வருகை தரும், மக்கள் ரயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, உடலின் வெப்பநிலை ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்.

திருநெல்வேலியில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நடைபெற்று வரும் பரிசோதனைகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் வைரஸ் தொற்றின் பாதிப்பைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story