100 நாடுகளின் தேசியக் கொடிகளை 21 நிமிடத்தில் அடையாளம் காட்டிய தூத்துக்குடி சிறுமி!
சிறுமி தியாஷிகாவை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் தனித்தனி திறமைகள் உண்டு. அந்த திறமைகள் வெளிப்படும் நேரமும், வெளிப்படுத்தும் வகையும் வேறுபாடாக இருக்கும். குறிப்பாக விளையாட்டு, நினைவுத் திறன், மனப்பாடம், ஆடல் என பல்வேறு துறைகளில் குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா உலக செஸ் போட்டியில் சாதனை படைத்து அனைவரையும் திரும்ப பார்க்க வைத்தார். இதேபோல, கண்ணைக் கட்டிக் கொண்டு கியூப் விளையாடுவது, கடலில் நீந்துவது என சிறு வயது குழந்தைகளின் சாதனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சில குழந்தைகள் ஒரு நாட்டின் பெயரை கூறினால் அந்த நாட்டின் தலைநகரின் பெயரை கூறுவது, அல்லது தலைநகரின் பெயரை கூறினால் அந்த நாட்டின் பெயரை கூறுவது என்ற திறமையைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.இப்படி சாதனை படைக்கும் குழந்தைகளின் விவரங்களை கூறிக் கொண்டே செல்லலாம்.
அந்த வகையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தேசியக் கொடியையும் நினைவு வைத்து அது எந்த நாட்டின் கொடி என்பதை நாட்டின் பெயரோடு உடனடியாக கூறும் அசாத்திய சாதனையுடன் திகழ்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த தியாஷிகா என்ற இரண்டரை வயது சிறுமி.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்-பவதாரணி தம்பதியின் மகள் தியாஷிகா. இரண்டரை வயதான இவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக உலக நாடுகளின் கொடிகளையும், அந்த நாட்டின் பெயருடன் பெற்றோர் கற்றுக் கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து எளிதாக பல்வேறு நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டும் திறமையை தியாஷிகா வளர்த்துக் கொண்டார். அவரது அறிவாற்றலை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமி தியாஷிகாவின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் ஏதாவது ஒரு சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சித்தனர்.
இந்நிலையில், சாதனை முயற்சியாக 192 உலக நாடுகளின் கொடிகள் மற்றும் 75 போக்குவரத்து சிக்னல்களை அடையாளம் காண்பித்து சாதனை படைத்துள்ளார். அந்தச் சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் கலாம் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி அங்கீகரித்துள்ளது.
இரண்டரை வயதில் சாதனை படைத்த அந்த சாதனை சிறுமியின் திறமையை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது 21 நிமிடங்களில் 100 நாடுகளின் தேசிய கொடிகளை சரியாக அடையாளம் கண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற குழந்தை தியாஷிகா மற்றும் அவரது பெற்றோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குழந்தை தியாஷிகாவை பாராட்டி மென்மேலும் சாதனைகள் புரிய வாழ்த்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu