தைப்பூச விழா: திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சாலையில் வலது புறத்தை கடைபிடித்து, ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி பாதுகாப்பாக செல்லுமாறும், மேலும் பக்தர்கள் ஜாதி ரீதியான உடைகளையோ, வர்ணங்களையோ அணிந்து வரவோ, சர்ப்ப காவடி எடுத்து வரவோ கூடாது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆண்டு தோறும் தை மாதத்தில் பக்தர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாக வந்தவாறு உள்ளனர்.
அவ்வாறு சாலை வழியாக நடந்து வரும் பொழுது சாலையில் இடது புறமாக குழுக்களாக நடந்து செல்வதால் அதே சாலையை பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் எப்பொழுதும் இடது புறமாகவே வாகனத்தை இயக்குவதால் வாகனங்கள் பக்தர்கள் மீது மோத வாய்ப்புள்ளதாலும், அவ்வாறு வாகனங்கள் மோதுவதை எதிர்பார்க்க இயலாததாலும் கனரக வாகனங்கள் பக்தர்கள் மீது மோதாமல் இருக்க வாகனங்கள் சாலையின் வலது புறம் ஏறிச்செல்வதாலும் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் பெரும் காயம் மற்றும் சிறுகாயம் மற்றும் வாகனங்களுக்கும் சேதங்கள் ஏற்படுகின்றன.
எனவே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மோட்டார் வாகனச்சட்டம் சாலை விதிகள் மற்றும் வழிமுறைகள் சட்டத்தின்படி பாதசாரிகள் எப்பொழுதும் சாலையில் வலது புறமாகவே நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. அப்பொழுதுதான் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை கண்டுகொண்டு விபத்து நேரா வண்ணம் பக்தர்கள் தங்களை காத்துக் கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம்.
அதேபோன்று பாதயாத்திரை வரும் பக்தர்கள் முதுகு பகுதி மற்றும் தோல் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் (Reflect Sticker) ஒட்டி பாதுகாப்பாக பாதையாத்திரை செல்லுமாறும், இந்த தைப்பூசத் திருவிழாவை விபத்தில்லாமல், பாதுகாப்பான முறையில் வழிபட்டு செல்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் திருக்கோவிலுக்கு இறைவழிபாட்டு எண்ணத்துடன் வரும் பக்தர்கள் ஜாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட வேஷ்டி, சட்டை, டீ ஷர்ட்கள், பனியன்கள் போன்றவற்றை அணிந்து வரவோ, அதை வெளிப்படுத்தும் வகையில் முகத்தில் வர்ணம் பூசி வரவோ, கொடிகள் கொண்டு வரவோ கூடாது.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி முருகக் கடவுள் போன்ற கடவுள் புகைப்படங்கள் தவிர வேறு யாருடைய புகைப்படமும் எக்காரணத்தைக்கொண்டும் வாகனங்களில் பேனர்கள் வைத்து வரக்கூடாது, அதே போன்று பக்திப்பாடல்கள் தவிர ஜாதி ரீதியான பாடல்களையோ மற்றும் சினிமா பாடல்களையோ இசைக்கவோ, ஒலிக்கவோ கூடாது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை கோவிலுக்கு எடுத்து வரக்கூடாது மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu