தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி குலசேகரன் பட்டினத்தில் பிரச்சாரம்

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி குலசேகரன் பட்டினத்தில் பிரச்சாரம்
X

குலசேகரன் பட்டினம் பகுதியில் கனிமொழி கருணாநிதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி குலசேகரன் பட்டினத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (07/04/2024) தனக்கு ஆதரவாகத் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குலசேகரப்பட்டினம் ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கூறியதாவது:-

கருணாநிதி வரக்கூடிய தேர்தல் என்பது யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முடிவு செய்யக்கூடிய தேர்தல், அதையும் தாண்டி இது ஒரு இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு முக்கியமான தேர்தல். பாஜக ஆட்சி வந்த பிறகு தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், 100 நாள் வேலை வாய்ப்பு கூட காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது என்று அதற்கு நிதி ஒதுக்காமல் ஒரு மோசமான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ரூ. 15 லட்சம் உங்கள் வங்கிக் கணக்கில் போடுவதாகச் சொல்லி வந்த பின்னர் உங்கள் அக்கவுண்ட்ல் இருக்கும் காசையும் எடுத்துக் கொண்டனர், அதேபோல் பாஜக ஆட்சிக்கு வரும்போது கேஸ் சிலிண்டர் விலை 410 தற்போது ரூபாய் 1000 மேலே உள்ளது. விவசாயிகளின் வருமானம் குறைந்துவிட்டது, இரண்டு கோடி பேருக்கு வேலை என்று சொன்னார் அதையும் கொடுக்கவில்லை, கேட்டால் பக்கோடா போடு என்று சொல்கிறார்கள்.

மழை வெள்ளம் வந்து பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு வரவில்லை நிவாரணம் அளிக்கவில்லை. நிவாரணம் அனைத்தும் கொடுத்தது தமிழ்நாடு அரசு. மோடி அவர்கள் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை இப்போது தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறார். ஓட்டு விழும் என்று வருகிறார் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்.

அதிமுக, மோடி அரசு ஆகிய இரண்டுமே 'ஸ்டிக்கர்'. அதிமுக ஸ்டிக்கர் ஒட்டியே பழகியவர்கள், எதையும் ஸ்டிக்கர் ஒட்டாமல் தரமாட்டார்கள். அதேபோல, பாஜக பெரிய ஸ்டிக்கர்.

பாஜக கொண்டு வந்த தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம், இஸ்லாமிர்களுக்கு எதிரான சட்டங்கள் என அனைத்து சட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்தது எடப்பாடி பழனிச்சாமி. அதனால் இரண்டு பேரையும் நம்ப முடியாது. அதிமுக, மோடி அரசு ஆகிய இரண்டுமே 'ஸ்டிக்கர்'. பாஜக ஒரு பெரிய ஸ்டிக்கர், அதிமுக சின்ன ஸ்டிக்கர், தேர்தலை பிறகு இரண்டும் ஒட்டிக்கொள்ளும்.

இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலையை 150 நாளாக ஆக்குவோம். சம்பளம் ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும், காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு குறைத்து வழங்கப்படும், பெட்ரோல் விலை 75 ரூபாய் டீசல் விலை 65 ரூபாய்.

நம்முடைய முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்குத் தருகிறார், சில பேருக்கு விடுபட்டிருந்தால் தேர்தல் முடிந்ததும் முகாம் அமைத்து அவர்களுக்கும் கொடுக்கப்படும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒரு லட்சம் ரூபாய் அடித்தட்டு மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இந்தியா கூட்டணி ஆட்சி வந்ததும் ஜிஎஸ்டியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளைச் சரி செய்யப்பட்டு எளிய முறை கொண்டு வரப்படும். மேலும் விவசாய பொருள்களுக்கு ஜிஎஸ்டி இருக்காது.

உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கக்கூடிய, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 112 லட்சம் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட முடிக்கப்படும் தருவாயில் இருக்கிறது. எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, எனது இரண்டாவது தாய் வீடாக இருக்கக் கூடிய தூத்துக்குடியில் மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை தர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!