மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை

மத்திய பட்ஜெட்  ஏமாற்றம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன்

நாட்டில் நேர்மையாக வரி செலுத்தும் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன் கருதி தனிநபர் வருமானவரி உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்

மத்திய பட்ஜெட் மாத ஊதியம் பெறுவபர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்துத் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் காலச்சூழலில், இந்த பட்ஜெட்டிலாவது தனிநபர் வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏற்கனவே வருமான வரி வரம்பு உயர்த்தப்படாததால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆண்டில் 12 மாத ஊதியத்திற்கு பதிலாக 11 மாத ஊதியம் மட்டுமே பெற்று வருகிறார்கள். கொரோனோ நோய் தொற்று காலத்தில் மத்திய வர்க்கம் கடுiமாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் நிதியமைச்சரின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றி சிந்திக்கும் மத்திய அரசு மாத ஊதியம் பெறும் ஊழியர்களின் நலன்கள் பற்றி சிறிதும் சிந்திக்காதது பெரும் அதிருப்தியை அளித்துள்ளது. டிஜிட்டல் கல்வி ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்தாலும், நாட்டில் உள்ள பல பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பான குடிநீர் வசதி, கழிப்பறை, மினசாரம் மற்றும் கட்டிட வசதிகளை முதலில் செய்து தர முன் வர வேண்டும்.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை என்பது தேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு எதிர்பார்த்த பலனை தராது என்பதையே காட்டுகிறது. நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும், 200 கல்வி தொலைக்காட்சிகள் உருவாக்கப்படும், 1 முதல் 12ம் வகுப்பு வரை தாய்மொழி கற்பிக்கப்படும் என்ற அறிவிப்பு ஏட்டளவிலேயே கடந்து விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது.

மத்திய அரசின் 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமானம் வரி உச்சவரம்பு உயர்த்தபடாதது மாத ஊதியம் பெறுவோர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. சில ஆண்டுகளாகவே வருமானவரி வரம்பு உயர்த்தப்படாததால் இந்தியா முழுவதும் மாத ஊதியம் பெறுபவர்கள் குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளின் பட்ஜெட் அறிவிப்புகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது வெற்று அறிவிப்புகளாகவே தெரிகிறது. நாட்டில் நேர்மையாக வரி செலுத்தும் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன் கருதி தனிநபர் வருமானவரி உச்ச வரம்பை உயர்த்த மத்திய அரசு முன் வர வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story