நாமக்கல் மாவட்டத்தில் 15 மாதங்களில் 2,407 சைபர் குற்றங்கள் பதிவு: ரூ. 14.75 கோடி மோசடி : எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ்கண்ணன்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 15 மாதங்களில், சைபர் குற்றங்கள் தொடர்பாக, 2,407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் ரூ. 14.75 கோடி மோசடி நடந்ததுள்ளது.
இது குறித்து நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சைபர் குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சைபர் குற்றம் நடந்த பின், குற்றவாளிகளை கண்டறிந்து பணத்தை மீட்பது சவாலாக உள்ளது. அதனால், சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். அதற்காக, போலீஸ் துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும், சிலர் ஏமாற்றி வருகின்றனர். ஆன்லைன் டிரேடிங், மோசடி ரம்மி விளையாட்டு, மோசடி திட்டங்களில் முதலீடு, இரட்டை மடங்கு பணம், செல்போன் மூலம் டாஸ்க்கை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற வழிகளில் பணத்தை இழந்தால், உடனடியாக, 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவித்தால், இழந்த பணம் அல்லது பொருளை பிளாக் செய்து நிறுத்தி வைக்க முடியும். பொதுமக்கள் பணத்தை ஆன்லைன் மூலம் இழந்தால் போலீஸ் ஸ்டேசன் வருவதற்கு முன் விரைவாக 1930 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மொபைல் திருட்டுகள் நடந்தால் போத்தலால்ஐஎல்எஸ் என்ற வெப்சைட்டில், போன் நம்பரை கொடுத்தால் உடனடியாக மொபைலை லாக் செய்துவிட முடியும். அதேபோல போலி ஆதார் எண்ணை பயன்படுத்தி, மொபைல் எண்களைப் பெற்று சைபர் கிரைம் குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால் மத்திய அரசு டெலிக்காம் அத்தாரிட்டி என்ற வெப்சைட்டில், ஆதார் எண் இணைந்திருக்கும் மொபைல் நம்பர் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல், வீட்டில் இருக்கும் பெண்களிடம் சுய தொழில் செய்ய உதவி செய்வதாக கூறி சைபர் குற்றங்கள் நடக்கிறது. இதுபோன்ற ஏமற்றுப் பேர்வளிகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும். சைபர் குற்றவாளிகள், பல எண்களோடு தொடர்பு கொண்டு ஈடுபடுகின்றனர். அதனால், ஆன்லைன் டிரேடிங், தொழில் பயிற்சி போன்றவற்றை நம்பக்கூடாது. இதில் சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்டத்தில், 2024ல், 1907 சைபர் குற்றங்கள் பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 14.75 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அவற்றில், ரூ. 3 கோடி அளவிற்கு பணம் பிளாக் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரூ. 85 லட்சம் திரும்பப் பெறப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ஆண்டில் இதுவரை, 500 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, நாளொன்றுக்கு, 5 சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள், இளைஞர்கள் மோசடி அழைப்புகளை நம்பாமல், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாவட்டத்தில் தங்கி இருக்கும் வெளிமாநில தொழிலாளர்களை, வெப்சைட்டில் பதிவு செய்வது குறித்து தொழிலாளர் நலத்துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu