இறந்த மானை சமைத்து சாப்பிட முயற்சித்த 6 பேருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
மான் இறைச்சி சாப்பிட முயன்றதற்காக அபராதம் விதிக்கப்பட்ட 6 பேர்.
கடந்த 3 ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நந்தவனம் அருகேயுள்ள பவானி ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மான் இறைச்சி எடுத்து செல்வதாக வனப்பணியாளர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், வனச்சரக அலுவலர் தலைமையிலான தனிக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தணிக்கை செய்ததில் பவானி ஆற்றங்கரையில் சில இறைச்சி துண்டுகள் கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்தை சுற்றி தணிக்கை செய்ததில் மேட்டுப்பாளையம் பிரிவு, உலிக்கல் சுற்று நிர்வாக எல்லைக்குட்பட்ட நீர்வள ஆதார துறை கட்டுப்பாட்டில் உள்ள பவானி ஆற்றங்கரையில் புதர் செடிகள் மத்தியில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. மேலும் விசாரணையில் கைப்பற்றிய இறைச்சி துண்டுகள் கண்டறியப்பட்ட புள்ளி மானின் இறைச்சி என்பது ஊர்ஜிதமானது.
தொடர்ந்து புலன் விசாரணை செய்ததில் எஸ்.எம். நகரை சேர்ந்த தண்டபாணி (25), சுரேஷ் (29), நாசர் அலி (22), பாசித் அகமது (20), வினித் குமார் (21), முகமது ஆசாத் (22)ஆகிய ஆறு நபர்கள் மது போதையில் பவானி ஆற்றங்கரையில் இறந்து கிடந்த ஆண் புள்ளி மானை சமைத்து சாப்பிட திட்டமிட்டு மானின் இறைச்சியை வெட்டி எடுத்து செல்ல முயற்சித்தது தெரியவந்தது. அப்போது வனப்பணியாளர்களை கண்டவுடன் இறைச்சியை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது. பின்னர் இன்று 6 பேரையும் பிடித்து வந்த வனத்துறையினர் வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து, ரூபாய் ஐம்பதாயிரம் அபராதம் விதித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu