'காந்தாரா' படத்தால் கர்நாடக மாநில அரசு அறிவித்த உதவி தொகை

காந்தாரா படத்தால் கர்நாடக மாநில அரசு அறிவித்த உதவி தொகை

கர்நாடகா மாநில தலைமை செயலகம் விதான் சவுதா (பைல் படம்).

'காந்தாரா'வில் இடம்பெற்ற கருத்தினை கவனத்தில்கொண்டு, கர்நாடக அரசு தெய்வ நர்த்தகர்களுக்கு உதவித்தொகை அறிவித்துள்ளது.

இந்தியத் திரையுலகத்தையே கர்நாடகாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது 'காந்தாரா' திரைப்படம். கன்னட மொழியில் தயாரான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம்தான் 'காந்தாரா'. இப்படம் கடந்த மாதம் செப்டம்பர் 30-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியில் மட்டுமே வெளியானது. அன்றுதான் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான அவரது கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' படமும் இந்தியா அளவிலான படமாக உலகம் முழுவதும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


'பொன்னியின் செல்வன்' படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பும் வரவேற்பும் படம் வெளியான பின்பு குவிந்த ஏராளமான பாராட்டும் அனைவரும் அறிந்தது. இதனிடையே அதே நாளில் கன்னட மொழியில் மட்டுமே வெளியான 'காந்தாரா', படம் வெளியான முதல் வாரத்தில் பெரிதும் பேசப்படாத நிலையில், அதற்கடுத்த இரண்டாம் வாரத்தில் இருந்து ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்போடு பாராட்டு மழையில் நனையத் தொடங்கியது. இதனால், படத்தின் வசூல் அதிகரித்து சாதனைச் சரித்திரத்தின் பயணத்தைத் தொடங்கியது.

இந்தநிலையில், 'காந்தாரா' படத்தினைத் தயாரித்த பிரபல ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் படத்தினை கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15 -ம் தேதி வெளியிட்டது. வெறும் 16 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட 'காந்தாரா' திரைப்படம் அண்மையில் இந்தியா பாக்ஸ் ஆபீசில் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. மேலும் பிற மொழிகளிலும் இத்திரைப்படம் நல்ல வசூலைக் குவித்து வருகின்றது என்பது கன்னடத் திரையுலகில் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் நாயகரும் இயக்குநருமான நடிகர் ரிஷப் ஷெட்டியின் அசாத்தியமான நடிப்பினைக் கண்ட தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான தனுஷ், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் 'காந்தாரா' திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

'காந்தாரா' திரைப்படம் பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தெய்வ நர்த்தகர்களின் வாழ்க்கைமுறையும் இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சிகளில் சொல்லப்பட்ட கருத்துகளின் எதிரொலியாக, '60 வயதுக்கு மேற்பட்ட 'தெய்வ நர்த்தகர்'களுக்கு 2000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்' என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.


இதுகுறித்து, பெங்களூரு பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரான பி.சி.மோகன், ''காந்தாரா திரைப் படத்தில் சித்திரிக்கப்பட்ட ஆவி வழிபாட்டு சடங்கு இந்து தர்மத்தின் ஒரு பகுதியாகும். அதன்படி,பா.ஜ.க தலைமையிலான கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்ட 'தெய்வ நர்த்தகர்களுக்கு 2000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகையை அறிவித்துள்ளது.'' என்று தனது சமூக வலைத்தள ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை, 'காந்தாரா' திரைப்படக் குழுவினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என ரசிகர்கள் சமுக வலைத்தளப் பக்கங்களில் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழகத்தில் ஏற்கெனவே, கிராமப்புற கோயில்களில் எவ்வித ஊதியமின்றிப் பணியாற்றிவரும் பூசாரிகளுக்கு 4000 ரூபாய் உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனையும் பல்வேறு நெட்டிசன்கள் பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story