பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பெண் பலி

நேற்று மாலை விருதுநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தபோது பெண் மீது மின்னல் தாக்கியது

Update: 2023-04-29 07:15 GMT

விருதுநகர் அருகேயுள்ள வி.ராமலிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை 

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பெண் பலியானார்.

விருதுநகர் அருகேயுள்ள வி.ராமலிங்கபுரம் பகுதியில், சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான ஜெய் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பேன்சிரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நேற்றும் வழக்கம் பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகளில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று மாலை விருதுநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை பெய்ததால் பட்டாசு ஆலையில் உற்பத்தி பணிகளை நிறுத்திவிட்டு, தயாரான பட்டாசுகளை எடுத்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பட்டாசு ஆலையில் இருந்த ஒரு அறையில் பலத்த மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கியதில் அந்த அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மதுரை மாவட்டம், வில்லூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பா (52) என்ற பெண் தொழிலாளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், மின்னல் தாக்கி உயிரிழந்த புஷ்பாவின் உடல் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News