சிவகாசியில் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவி
Welfare assistance on behalf of a charity in Sivakas;
சிவகாசி அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, தொண்டு நிறுவனம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்காக பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. இந்த நிறுவனம் சிவகாசியில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்து, 780 மாணவ, மாணவிகளுக்கு 1 கோடியே 51 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கியுள்ளது.
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உதவும் உள்ளங்கள் அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், அறங்காவலர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகாசி பெல் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் பீனா ராஜாசிங், சிவகாசி வணிகவரித்துறை துணை ஆணையர் செல்வபிரியா, இந்துநாடார் உறவின்முறை செயலாளர் கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் உதவும் உள்ளங்கள் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.