கார் மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்;

Update: 2022-09-20 11:30 GMT

பைல் படம்.

திருவில்லிபுத்தூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்தில்  கணவன், மனைவி  ஆகியோர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள எம்.பி.கே.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (55). இவரது மனைவி ராமலட்சுமி (47). மகள் சிந்துஜா (23). சந்தானகிருஷ்ணன், கொத்தங்குளம் பகுதியில் ஸ்பின்னிங் மில் நடத்தி வந்தார்.

சிந்துஜா மதுரை தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். 3 பேரும் ஒரு காரில் மதுரைக்கு சென்று விட்டு, புதுப்பட்டிக்கு இன்று அதிகாலையில் வந்து கொண்டிருந்தனர். காரை சந்தானகிருஷ்ணன் ஓட்டி வந்தார். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், வனத்துறை அலுவலகம், ஆவின் பாலகம் அருகே கார் வந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த புளியமரத்தில்  மோதியது.

இந்த விபத்தில் சிக்கிய சந்தானகிருஷ்ணன் அவரது மனைவி ராமலட்சுமி இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிந்துஜா, திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News