விருதுநகர் மாவட்டத்தில் தூரல் மழை: பட்டாசு உற்பத்தி பாதிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் தூறல் மழை காரணமாக பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.;
விருதுநகர் மாவட்டத்தில், தென் மேற்கு பருவமழையின் தாக்கம் இன்னும் முழுமையாக தொடங்காத நிலையே இருந்து வருகிறது. வழக்கமாக, மே மாதம் இறுதியில் இருந்து விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குற்றாலச்சாரல் காற்று வீசுவதுடன் அவ்வப்போது தூறல் மற்றும் சாரல்மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு ஜுலை மாதம் இரண்டாவது வாரம் துவங்கிய நிலையில், நேற்று வரை கடுமையான கோடை காலம் போல வெயில் சுட்டெரித்து வந்தது.
நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்து தூறல் மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக இருந்து வந்த கடுமையான வெட்கை சற்று தணிந்துள்ளது. மேலும், இன்று காலையில் இருந்து வெயில் இல்லாத நிலையில், லேசான தூறலுடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தாலுகா பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது பருவமழைக்கான இதமான சூழலுடன் மேகமூட்டமாக இருப்பதாலும், வெயில் இல்லாமல் இருப்பதாலும் பட்டாசு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் நடைபெறாத நிலையில், ஏற்கனவே தயாரான பட்டாசுகளை பெட்டிகளில் அடைக்கும் பணிகளும், தயாரான பட்டாசு பெட்டிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணிகளிலும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதால், பட்டாசு ஆலை தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் பட்டாசு உற்பத்தி பணிகள் சற்று குறைவாகவே இருக்கும் என்று பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கூறினர்.